புது டெல்லி: ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஏற்கமுடியாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கவுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஹரியாணாவில் தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதவை. இது அடிப்படை கள யதார்த்தத்திற்கு எதிரானது. இது ஹரியாணா மக்களில் மனநிலைக்கு எதிராக இந்த முடிவுகள் உள்ளன. எனவே இன்று அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது. 3 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இன்னும் அதிகமாக புகார்கள் வருகின்றன.
ஹரியானாவில் உள்ள எங்கள் மூத்த சகாக்களிடம் பேசினோம். இதுபற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதை நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் வழங்குவோம். எங்கள் வேட்பாளர்களால் தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நாங்கள் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். ஹரியானாவில் இன்று நாம் பார்த்தது சூழ்ச்சிக்கான வெற்றி, மக்களின் விருப்பத்தை சிதைத்ததற்கான வெற்றி. இது வெளிப்படையாக ஜனநாயக செயல்முறைகளுக்கு கிடைத்த தோல்வி”என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், "முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதவை, அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வருகின்றன. ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானிபட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இம்மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றியும் அதிகளவில் புகார்கள் வருகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.
» இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிண்டால் ஹரியாணாவில் வெற்றி: பாஜக அமைச்சரை தோற்கடித்தார்
ஹரியாணாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.