ஹரியாணாவில் காங்கிரஸ் வாக்குகளை பிரித்துவிட்டார் கேஜ்ரிவால்: ஸ்வாதி மலிவால் குற்றச்சாட்டு

By KU BUREAU

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியா கூட்டணிக்கு துரோகம் செய்துவிட்டதாக ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்வாதி மலிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸைப் பழிவாங்கவே கேஜ்ரிவால் ஹரியாணாவில் தனித்துப் போட்டியிட்டார். அவர் என்னை பாஜக ஏஜென்ட் என்று பொய்யாகக் குற்றம் சாட்டி, இன்று அவரே இண்டியா கூட்டணிக்கு துரோகம் இழைத்து காங்கிரஸ் வாக்குகளை பிரிக்கிறார்.

எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள், வினேஷ் போகட்டைக்கூட தோற்கடிக்க ஒரு வேட்பாளர் நிறுத்தினார். உங்கள் சொந்த மாநிலத்தில் உங்கள் வைப்புத்தொகையை பெற முடியாத அளவுக்கு நிலைமை ஏன் வந்துவிட்டது?. இன்னும் நேரம் இருக்கிறது, உங்கள் ஈகோவை விட்டுவிடுங்கள். உங்கள் மங்கலான கண்களில் உள்ள திரையை அகற்றி, நாடகம் செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்காக பணியாற்றுங்கள்”என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சி எந்த இடத்திலும் முன்னணியில் இல்லை. கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியாணாவில் அக்கட்சி 1.64 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 50இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக, காங்கிரஸுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஹரியாணா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டது. ஆம் ஆத்மியின் ஆதரவு இல்லாமல் எந்த ஆட்சியும் அமையாது என தேர்தல் பிரசாரத்தின் போது கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE