‘ஷாப்பிங் மாலில் லிப்டை பயன்படுத்த விடாமல் தடுத்தார்கள்’ - டெலிவரி பாயாக பணியாற்றிய ஜொமாட்டோ சிஇஓ ஆதங்கம்!

By KU BUREAU

புது டெல்லி: டெலிவரி பணியாளராக உணவு ஆர்டரை எடுக்க செல்லும்போது, குருகிராமில் உள்ள ஒரு மாலில் தன்னை லிப்டைப் பயன்படுத்த விடாமல் தடுத்ததாக ஜோமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் குற்றம் சாட்டினார்.

ஜோமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், தனது மனைவி கிரேசியா முனோஸுடன் டெலிவரி ஊழியராக சமீபத்தில் பணியாற்றியுள்ளார். இந்த டெலிவரி பணியின்போது, ஆர்டரைப் பெற குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்குச் சென்றபோது, லிப்ட்டில் ஏறக்கூடாது என தடுக்கப்பட்டு படிக்கட்டுகளில் ஏறச் சொன்னதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், "எனது இரண்டாவது ஆர்டரின் போது, ​​அனைத்து டெலிவரி பார்ட்னர்களுக்கும் பணி நிலைமைகளை மேம்படுத்த, மால்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தேன். மேலும் மால்கள் டெலிவரி பார்ட்னர்களிடம் அதிக மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்.

ஹல்திராமின் ஆர்டரைப் பெற குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலை அடைந்தோம். லிப்டில் செல்வதற்காக பிரதான நுழைவு வாயில் வழியாக செல்ல முயன்றேன். அவர்கள் என்னை தடுத்து வேறு வாயில் வழியாக போக சொன்னார்கள். எனவே அவர்கள் படிக்கட்டுகளில் ஏறச் சொல்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இதை உறுதிப்படுத்த மீண்டும் பிரதான நுழைவாயிலில் நுழைந்தேன், டெலிவரி பார்ட்னர்களுக்கான லிப்ட் கிடையாது என சொன்னார்கள்" என்று அவர் கூறினார்.

டெலிவரி பார்ட்னர்கள் மாலுக்குள் நுழைய முடியாது என்பதையும், ஆர்டர்களைப் பெற படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்வதற்காக மூன்றாவது மாடிக்கு படிக்கட்டுகளின் வழியாக ஏறியதாக கோயல் கூறினார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE