ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த நெருக்கடி: எம்.பி சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

By KU BUREAU

பஞ்சாப்: லூதியானாவில் உள்ள ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பியான சஞ்சீவ் அரோரா, தனது நிறுவனத்தின் பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அரோரா, “ நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். எனவே சோதனைக்கான காரணம் குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்" என்று கூறினார்.

அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, "இன்று காலை முதல், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர்கள் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு, என் வீடு, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீடுகளில் சோதனை நடத்தினர். அங்கெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த ஆம் ஆத்மி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மே 2022 இல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின், இன்னும் சிறையில் இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE