மும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கடந்த ஆண்டு இந்துத்துவ கொள்கையின் பிதாமகன் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் வழக்கு ஒன்றை புனே நீதிமன்றத்தில் தொடுத்தார். இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டது.
ராகுல் கூறியது பொய்: சத்யாகி சாவர்க்கர் தனது மனுவில், “சாவர்க்கர் தனது ஐந்தாறு நண்பர்களுடன் சேர்ந்து முஸ்லிம் நபர் ஒருவரை அடித்ததாகவும், அந்த தருணத்தில் தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவரே தனது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டதாகக் கடந்த 2023-ம் ஆண்டில் லண்டனில் ராகுல் காந்தி பேசினார்.
ஆனால், அப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லை. சாவர்க்கர் எங்கேயும் அப்படி எழுதவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது. சாவர்க்கரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பேச்சு” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி வரும் அக்.23-ம் தேதி நேரில் ஆஜராக புனே சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
» காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
» ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்: இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை