‘ஹரியானா, காஷ்மீரில் காங். ஆட்சிக்கு வாய்ப்பு’ முதல் ட்ரம்ப் ‘விபரீத’ யோசனை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: மக்களவைத் தேர்தலில் பாய்ச்சலுடன் புதுத்தெம்பு பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த ஆண்டினை சிறப்பாக நிறைவு செய்யும் எனத் தெரிகிறது. ஹரியானாவில் 10 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஜம்மு காஷ்மீரிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஹரியானா கருத்துக்கணிப்பு முடிவுகள்:

டைனிக் பாஸ்கர்: பாஜக 19-29 இடங்கள், காங்கிரஸ் 44-54 இடங்கள்
துருவ் ரிசர்ச்: பாஜக 22-32, காங்கிரஸ் 50-64
இண்டியா டூடே - சி வோட்டர்: பாஜக 20-28, காங்கிரஸ் 50-58
ஜிஸ்ட் - டிஃப் ரிசர்ச்: பாஜக 29-37, காங்கிரஸ் 45-53
பீப்புள்ஸ் ப்ளஸ்: பாஜக 20-32, காங்கிரஸ் 49-61
ரிபப்ளிக் பாரத் - மட்ரீஸ்: பாஜக 18-24, காங்கிரஸ் 55-62
ரிபப்ளிக் டிவி - பி-மார்க்: பாஜக 27-35, காங்கிரஸ் 51-61
மொத்தம் 90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்.18,. 25, அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

ஜம்மு காஷ்மீர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

ஆக்ஸிஸ் மை இந்தியா: பாஜக 24- 34, காங்.+என்சிபி 35-45, பிடிபி 4-6
தைனிக் பாஸ்கர்: பாஜக 20-25, காங்.+ என்சிபி 35-40, பிடிபி 4-7
இண்டியா டுடே சி-வோட்டர்: பாஜக 2 -32, காங்.+என்சிபி 40-48, பிடிபி 6-12
பிப்புள்ஸ் ப்ளஸ்: பாஜக 23-27, காங்.+என்சிபி 46-50, பிடிபி, 7-11

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் திங்கள்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின்போது, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அரசுத் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மின் நிலைமை எப்படி? - தமிழக அரசு விளக்கம்: தமிழகத்தில் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை என்றும், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4 வாரங்களாக காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை, எழும்பூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “அடக்குமுறையை முதல்வர் ஏவக் கூடாது. அடக்குமுறை மூலம் வெற்றி பெற முடியும் என்றால் திமுகவே அரசியலில் இடம்பெற்றிருக்க முடியாது” என்று என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். “முதல்வருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு. சாம்சங் நிறுவன பிரச்சினையில் அவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் பயணம்: ஜெய்சங்கர் விளக்கம் - “எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாத மத்தியில் நான் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளேன். எனது பயணம் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளைப் பற்றியது அல்ல. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொறுப்பான உறுப்பினராக இருப்பது மட்டுமே” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையே சமாதானத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தான் நினைப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

2-ம் கட்ட சென்னை மெட்ரோ - மத்திய அரசு விளக்கம்: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

“சிவாஜியின் சிந்தனைக்கு எதிராக பாஜகவினர்...” - ராகுல்: மகாராஷ்டிராவின் கோலாப்பூருக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அங்கு சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் புதியதல்ல. சிவாஜி மகாராஜ் எந்த சித்தாந்தத்துடன் போராடினாரோ, அதே சித்தாந்தத்துடன் காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. பாஜக அமைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, சில நாட்களிலேயே உடைந்தது. சிவாஜிக்கு சிலை வைத்தால் போதாது, அவரது சித்தாந்தமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதில் உள்ள செய்தி” என்று தெரிவித்தார்.

அமைதியாக நடந்த ஹரியானா தேர்தல்: ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை அமைதியான முறையில் நடந்தது. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

இஸ்ரேலுக்கு ட்ரம்ப் சொன்ன யோசனை: “அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என ஈரான் திட்டமிட்டால் அதனை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தியே தீருவார்கள். அணுசக்தி தானே உலகுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். அதனால், முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதே சரியாக இருக்கும். இதை இஸ்ரேல் முதலில் செய்யட்டும். பின்னர் மற்றதைப் பற்றிக் கவலைப்படலாம்” என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.

லெபனானில் இதுவரை 127 குழந்தைகள் உள்பட 2,000+ உயிரிழப்பு: கடந்த இரு வார காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில், லெபனானில் இதுவரை 127 குழந்தைகள், 261 பெண்கள் உள்பட 2,000-க்கும் மேற்போட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருப்பது போர்ப் பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது.

“மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகள்...” - ஹெச்.ராஜா விமர்சனம்: “4பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது" என்று கூறிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஹெச்.ராஜா, தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE