மும்பை புழுதிப்புயலால் பேனர் சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஓடுதளம் சரியாக தெரியாததால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆரே – அந்தேரி இடையே விளம்பர பேனர் விழுந்து வயர்கள் துண்டிக்கப்பட்டதால் இந்த வழியாக இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. ஹார்பர் லைனில் இயக்கப்பட வேண்டிய புறநகர் ரயில்கள் சேவைகள் முற்றிலுமாக முடங்கியது. இந்த புழுதிப்புயல் காரணமாக உச்சகட்ட சம்பவமாக காட்கோபர் செட்டாநகர் ஜங்ஷனில் 100 அடி உயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான விளம்பரப் பலகை பயங்கர சத்தத்துடன் சரிந்து அங்கிருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.
இதனால் அப்பகுதியில் நின்றிருந்தவர்களும், அந்த வழியாகச் சென்றவர்களும் அதில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 70 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜாவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. எம்எம்ஆர்டிஏ மற்றும் தீயணைப்பு படை சார்பில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணிக்கு குவிக்கப்பட்டனர். அதன் காரணமாக துரிதமாக மீட்பு பணிகள நடைபெற்றது.
விளம்பர பலகை விழுந்த இடத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.