பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்து ஆளுநர் மாளிகையில் இன்று தங்க உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1977 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சி.வி. ஆனந்த போஸ், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றி வருகிறார். அவருக்கும் அம்மாநில அரசுக்கும் இடையே உரசல் போக்கு நிலவி வருகிறது. அரசின் திட்டங்களுக்கு அவர் பெரும் இடையூறாக இருந்து வருகிறார் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் கொல்கத்தா ஹரே ஸ்ட்ரீட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிகப் பணியாளரான பெண் ஒருவர், ஆளுநர் மாளிகையின் உள்ளே அமைந்துள்ள காவல் நிலையத்திற்குச் சென்று ஆளுநர் ஆனந்த போஸ் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த காவல் அதிகாரி உடனடியாக ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஹரே ஸ்ட்ரீட் போலீஸார், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் இன்று இரவு தங்க இருக்கிறார். இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக வீண்பழி செலுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளுக்கு.ப் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.