பஞ்சாபில் ஜூன் 1-ம் தேதி இறுதிகட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள ஃபதேகர் சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமர் சிங்குக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என பிரதமர் மோடி கூறிவருகிறார். நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாதது ஏன்? நாட்டில் பணவீக்கம் அதிகரித்தது ஏன்?
உங்கள் குழந்தைகளுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை? நாட்டில் 70 கோடி இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது. மோடி ஆட்சியில் அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆட்சியை கைப்பற்றுவதற்காக பிரதமர்மோடி பொய்களை பேசி, வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார்.
நாட்டில் உள்ள எஃகு ஆலைகள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் எஃகு தொழில்துறை நலிவடைந்து வருகிறது. நடுத்தர மக்களின் நலனுக்காக ஒரு திட்டமும் இல்லை. முன்னேற்றத்தை எல்லாம் டி.வி.யில்தான் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.
» திருவீதிபள்ளத்தில் காவல் நிலையம் அருகே திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சமுதாய கழிப்பறை
மக்களை பாஜக மதிப்பதில்லை. மக்கள் பிரச்சினை பற்றி பாஜகவினர் பேசுவதில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பின்மையை குறைக்கவும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்வதில்லை. மக்களை பற்றி பேசுவது காங்கிரஸ் கட்சிமட்டும்தான். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.