பகீர்... 'தலிபான் இந்தியா தலை ஜாக்கிரதை': வீட்டுச் சுவற்றில் எழுதிய கர்நாடகா போலீஸ்காரர்!

By காமதேனு

ஆனேக்கல்லில் உள்ள ஒரு போலீஸ்காரர் தனது வீட்டின் சுவற்றில தாலிபன் இந்தியா தலை ஜாக்கிரதை என்பது உள்ளிட்ட சர்ச்சை ஏற்படுத்தும் வாசகங்கள் எழுதிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஆனேக்கல்லைச் சேர்ந்தவர் முனிராஜு. பானசவாடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் காவல் துறை பணியில் சேர்வதற்கு முன்பு, தர்காவிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அதனால் தனக்கு காவல் துறையில் வேலை கிடைத்தது என்றும், அதன் பிறகு இஸ்லாத்திற்கு மாறியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தனது வீட்டுச் சுவர், வளாகம், கேட், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவர் சில வாசகங்களை எழுதியுள்ளார். அதில், இஸ்லாம், மூன்றாம் உலகப் போர், தலிபான் இந்தியா தலை ஜாக்கிரதை , சலாம் இஸ்லாம் என்று பதற்றத்தை உருவாக்கும் வகையில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் புகாரின் பேரில், சூர்யாசிட்டி காவல் நிலைய போலீஸார், முனிராஜை கைது செய்யச் சென்ற போது, 'என்னை அழைத்துச் செல்ல வந்து பெரிய தவறு செய்கிறீர்கள், என் கையைத் தொடாதீர்கள்' என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து போலீஸார், அவரை கைது செயதுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் மற்றும் பானசவாடி காவல் நிலையங்களில் பணியில் இருந்த காவலர் முனிராஜு, கடந்த மூன்று மாதங்களாக பணியில் இருந்தபோது, ​​குடிபோதையில் இதுபோன்ற செயலைச் செய்ததாக போலீஸார் கூறுகின்றனர். எப்போதும் குடிபோதையில் இருந்த இவர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கொடி

சமீபகாலமாக கிராமத்தில் மக்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இதே போன்ற சர்ச்சை எழுத்துக்களை அவர் எழுதியபோது, கிராம மக்கள் அழித்துள்ளனர். ஆனால், மீண்டும் அவர் அத்தகைய வாசகங்களையே எழுதியுள்ளார்.

இதுகுறித்து சூர்யாநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் மதமாற்ற முயற்சி உள்ளதா என விசாரிக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE