நாளை முதல் ரூ.2000 நோட்டுகளை வாங்க மாட்டோம்- பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

By காமதேனு

பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் விற்பனை

2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.

அரசு பேருந்துகளிலும் பெட்ரோல் பங்க்குகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி பலரும் டிக்கெட் பெற்று வந்தனர். ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 2 நாட்களில் முடிகிறது. இந்த வாரத்தில் இன்றும் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும். 28ம் தேதி மிலாது நபிக்காக இன்றைய தினம் வங்கி விடுமுறையாக உள்ளது.

எனவே தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் நடத்துனர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டு

இந்தநிலையில் பெட்ரோல் பங்க்குகளில் இன்று மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 2 நாட்கள் மட்டுமே காலக்கெடு உள்ளது. இன்றைய தினம் வங்கி விடுமுறை நாளையும் நாளை மறுநாளும் 29, 30ம் தேதிகளில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்பதால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE