தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

By காமதேனு

தாயைப் பிரிந்த ஏக்கத்தில் சரியாக உணவருந்தாமல் தவிர்த்து வந்த 5 மாத குட்டி யானை உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானைக்கூட்டம்

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகேயுள்ள அவரேகுந்தா பசவனஹள்ளி கிராமத்தில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைக் கூட்டம் நுழைந்தது. கிராமத்தையொட்டி உள்ள காபி தோட்டத்தில் புகுந்த அந்த யானை கூட்டம் தோட்டத்தை நாசமாக்கிய பின்னர் அங்கிருந்து மீண்டும் வனத்துக்குள் திரும்பி விட்டது.

அந்த சமயத்தில் கூட்டத்துடன் வந்த ஐந்து மாதக் குட்டி யானை ஒன்று, தாயைப் பிரிந்து வேறு வழியில் சென்றுவிட்டது. பின்னர் தாயைக் காணாமல் காபி தோட்டத்தில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டு காபி தோட்டத்திலேயே பராமரித்து வந்தனர்.

குட்டி யானை (மாதிரி படம்)

மேலும் அதை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால், குட்டி யானையின் தாயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது வனத்துக்குள் வெகு தூரம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த குட்டி யானை துபாரே யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு வைத்து குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்தனர். மேலும் அதற்கு சிகிச்சையும் அளித்து வந்தனர். ஆனால் தாயைப் பிரிந்த சோகத்தில் இருந்த அது சரியாக சாப்பிடாமல் தவிர்த்து வந்தது. இதனால் நாளுக்கு நாள் அதிக சோர்வடைந்து கொண்டே வந்தது.

அதனால் அந்த குட்டி யானைக்கு கஞ்சி, பால் ஆகியவை புட்டி மூலமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் தாயைப் பிரிந்த ஏக்கத்தில் அதன் உடல் நிலை திடீரென்று மோசமானது. இதனால் கால்நடை மருத்துவக் குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். குளுக்கோசும் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து அதன் உடல் வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. தாயை இழந்து பரிதவித்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் 25 நாட்களாக போராடி வந்தனர். ஆனால் அந்த போராட்டம் சோகத்தில் முடிந்தது. தாயைப் பிரிந்த ஏக்கத்தில் குட்டியானை உயிரிழந்ததாக வனத்துறையினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE