கடனை திருப்பித் தரலையா? வீட்டிற்கு சாக்லேட்டோட வந்துருவாங்க... உஷார்!

By காமதேனு

வாங்கிய கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சாக்லேட் அனுப்பும் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) அமல்படுத்த தொடங்கியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியானது கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு நூதன திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் முடிந்த பிறகும், கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் முதலில் வங்கியில் இருந்து அழைப்பு விடுக்கப்படுகிறது.

அப்போது, வங்கியில் இருந்து வரும் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் எடுக்காமல் இருந்தால், அவர்களுக்கு கடனை செலுத்தும் எண்ணம் இல்லை என கருதப்படுகிறது

இது போன்ற வாடிக்கையாளர்களிடம் கடன் தவணையை வசூல் செய்வதற்காக, அவர்களின் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ எந்தவித முன்னறிவிப்பின்றி செல்வதுதான் சிறந்த வழியாகும்.

அப்படி வசூல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் போது அவர்களிடம் சாக்லேட் கொடுத்து அனுப்பும் திட்டத்தையும் அமல்படுத்துவதாக ஸ்டேட் வங்கி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ வங்கியின் சில்லறை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 16.46 % அதிகமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE