ஒரே நேரத்தில் 43 விமானிகள் ராஜினாமா; 700 விமானங்கள் ரத்து... ஆகாசத்தில் ஊசலாடும் ‘ஆகாசா ஏர்’ நிறுவனம்!

By காமதேனு

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை சாத்தியமாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ’ஆகாசா ஏர்’ விமான சேவை நிறுவனம் மூடுவிழாவை நோக்கி விரைகிறது. கூண்டோடு ராஜினாமா செய்யும் விமானிகள், நூற்றுக்கணக்கில் விமான சேவைகள் ரத்து என ஆகாசாவின் தடுமாற்றம் கடந்த சில மாதங்களாகவே தொடர்கிறது.

ஒரே நேரத்தில் 43 விமானிகள் திடீரென ராஜினாமா செய்ததால், இந்த மாதத்தில் மட்டும் தினத்துக்கு 24 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆகாசா உள்ளாகி இருக்கிறது. இந்நிலை தொடருமெனில் விமான நிறுவனம் மூடப்படும் அபாயம் காத்திருப்பதாகவும், டெல்லி நீதிமன்றத்தில் ஆகாசா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாசா ஏர் விமானம்

உயர் ஊதிய விகிதங்களுக்காக போட்டி விமான நிறுவனங்களுக்கு விமானிகள் தாவும் போக்கு ஆகாசாவை பாதித்துள்ளது. தற்போதைய நிலையில், தினத்துக்கு 120 விமானங்களை இயக்கும் ஆகாசா, இந்த மாதத்தில் மட்டும் 600 முதல் 700 விமானங்களை ரத்து செய்கிறது. இதே போன்று ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 700 விமானங்களை ரத்து செய்தது.

போட்டி நிறுவனங்களுக்கு தங்களது ஆட்சேபத்தை வெளிப்படுத்தும் கடிதங்கள், ராஜினாமா செய்யும் விமானிகள் மீது அபராதம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கை உள்ளிட்டவற்றில் இறங்கிய போதும் ஆகாசாவின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

விமானிகளின் திடீர் ராஜினாமா காரணமாக அவ்வப்போது விமானப் பயணங்களை ரத்து செய்வதால், ஆயிரக்கணக்கான பயணிகள் அதிருப்தி மற்றும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். அவர்களின் புகார்கள் மற்றும் கண்டனங்களுக்கு செவி கொடுக்க முடியாமல் ஆகாசா தவித்து வருகிறது.

விமானப் பயணத்தை மலிவு கட்டணத்தில் வழங்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட ஒரு விமான சேவை நிறுவனம் ஊசலாடுவது, மத்திய வர்க்க விமானப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE