தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

By காமதேனு

திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்ட 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளன. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர்வதற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதேபோல், தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கல்வித் துறை மற்றும் வருவாய்த் துறை, காவல் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவர்கள் எந்தவித அரசியல் கட்சிகளின் சார்பின்றி அனைவருக்கும் பொதுவானவர்களாக இயங்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதி. சில நேரங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தாங்களாகவோ அல்லது மிரட்டல் விடுத்தோ சார்புடன் இயங்கும் சூழல் ஏற்பட்டுவிடுவதுண்டு.

பணியிடை நீக்கம்

அத்தகைய குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறி, அரசியல் நிகழ்வுகளிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் பங்கேற்ற அரசு ஊழியர்கள் 3 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அம்மாநில தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு ஆசிரியர் பார்த்தபிரதீம் டெப்ராய்,கல்வித் துறை ஊழியர் ராசு சவுத்ரி, திரிபுரா மாநில ரைபிள்ஸ் (டிஎஸ்ஆர்) வீரர் கிஷன் டெபர்மா தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக அந்தந்த துறை அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE