81 கோடி இந்தியர்களின் ஆதார், பாஸ்போர்ட் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு, விற்கப்பட்டது தொடர்பாக 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவிட் தொற்று காலங்களில் கோவிட் பரிசோதனைக்காக இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட தரவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ICMR) சேகரிக்கப்பட்டது. இந்த தரவுகள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வரில் பாதுகாக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில் 81 கோடி இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி, பாஸ்போர்ட் உள்ளிட்ட தரவுகள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.
மேலும், இந்தத் தரவுகள் அனைத்தும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றும் இதுவரை நடந்ததிலேயே இதுதான் மிகப்பெரிய ஹேக் என்றும் பலரும் கூறினர். இதையடுத்து, இதைச் செய்தது யார் என்று கண்டுப்பிடிக்கும் பணியில் சிபிஐ மற்றும் பல்வேறு மத்திய ஏஜென்சிக்கள் இறங்கின. இந்நிலையில், 81 கோடி இந்தியர்களின் தரவுகள் திருடப்பட்டது உண்மை என்பது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, 3 மாநிலங்களை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, விளக்கமளித்துள்ள சிபிஐ அதிகாரி ஒருவர், இந்த சம்பவம் குறித்து கடந்த மாதம் டெல்லி போலீஸார், தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்தார். மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பி.டெக் பட்டதாரி, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த இருவர் மற்றும் ஜான்சியை சேர்ந்த ஒருவர் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமான நால்வரும், விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என திட்டமிட்டனர்.
இதற்காக, கடந்த அக்டோபர் மாதம் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தரவுகளை திருடியுள்ளனர். மேலும், அமெரிக்காவின் விசாரணை நிறுவனமான எப்.பி.ஐ மற்றும் பாகிஸ்தானின் தேசிய கணிணி மய தேசிய அடையாள எண் உள்ளிட்டவற்றில் இருந்தும் தரவுகளை திருடியது அம்பலமானது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் மத்திய புலனாய்வின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர். மத்திய அரசின் சர்வரில் இருந்து தரவுகள் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘அவரை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...' ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!
வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி; தண்ணீரில் மிதக்கும் தென் தமிழகம்!
தொடரும் கனமழை... தென் மாவட்ட ரயில்கள் ரத்து! இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்பு!
150 ஆண்டுகளுக்கு பிறகு... தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த பெருமழை!