தரைப் பாலத்தைக் கடக்கும்போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: குஜராத்தில் தமிழர்கள் 27 பேர் பத்திரமாக மீட்பு

By KU BUREAU

பாவ்நகர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பெண்கள் உட்பட 27 பேர், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு ஆன்மிகசுற்றுலா சென்றனர். கடந்த வியாழக்கிழமை, குஜராத் மாநிலம் கோலியாக் கிராமத்தில் உள்ள நிஷ்கலான்க் மஹாதேவ் கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு, அவர்கள் சோம்நாத் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் கனமழை பெய்துகொண்டிருந்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு 7 மணி அளவில், தரைப் பாலத்தைக் கடக்கும்போது வெள்ளம் சூழ்ந்த நிலையில், பேருந்து அதில் சிக்கிக் கொண்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், பேருந்தின் கண்ணாடியை உடைத்து, பயணிகளை மீட்டு தாங்கள் வந்த லாரியில் ஏற்றினர். வெள்ளப் பெருக்கு அதிகமான நிலையில், மீட்புக் குழுவினர் சென்ற லாரியும் வெள்ளத்தில் சிக்கியது. நள்ளிரவில், வெள்ளம் சற்று குறையத் தொடங்கிய நிலையில், பயணிகளை மீட்க ட்ரக் அனுப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பயணிகள் அனை வரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்

இது குறித்து பாவ்நகர் மாவட்ட ஆட்சியர் மேத்தா கூறுகையில், “மீட்புக் குழுவினர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துபயணிகளை மீட்டு தங்கள் லாரியில்ஏற்றினர். வெள்ளம் அதிகமான நிலையில் அந்த லாரியும் சிக்கியது. இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தவும் முடியவில்லை. இதனிடையே ராஜ்கோட்டிலிருந்து தேசிய மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு வெள்ளம் சற்று குறையத் தொடங்கிய நிலையில், டிரக் மூலம் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்

மீட்கப்பட்ட 49 வயதான பெண் பயணி ஒருவர் கூறுகையில், “வெள்ளத்தில் பேருந்து சிக்கியதும் எங்கள் அனைவரையும் பயம் சூழ்ந்தது. நாங்கள் யாரும் பிழைக்க மாட்டோம் என்றே நினைத்தோம். மீட்புப் படையினரின் முயற்சியால் நாங்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டோம். நான் உயிரோடு இருப்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE