என்சிபியுடன் கூட்டணி வைப்பதை பாஜக வாக்காளர்கள் விரும்பவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு

By KU BUREAU

மும்பை: பாஜகவின் "முக்கிய வாக்காளர் தளம்" தேசியவாத காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை விரும்பவில்லை. இருப்பினும் 80 சதவிகிதம் பேர் இப்போது இத்தகைய அரசியல் சமரசங்கள் தேவை என்று உறுதியாக நம்புகிறார்கள் என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றி எண்ணிக்கை குறைய அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி காரணம் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

2024 தேர்தலில் பாஜக, என்சிபி மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை உள்ளடக்கிய ஆளும் கூட்டணி, மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2019 தேர்தலில் 23 இடங்களைப் பெற்ற பாஜக ஒன்பது இடங்களை வென்றது. இது தேசிய அளவில் அதிர்ச்சியை உருவாக்கியது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “கடந்த சில பொதுத் தேர்தல்களில் ஒப்பிடும்போது பாஜகவின் மோசமான செயல்பாடு இது என்பது உண்மைதான். நாங்கள் 28 இடங்களில் போட்டியிட்டோம், ஆனால் மிகக் குறைவான இடங்களைப் பெற்றோம். இருப்பினும் 12 இடங்களை 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளால் இழந்தோம், அதாவது 3,000- 6,000 வாக்குகளில் இழந்தோம்.

ஷிண்டேவின் சேனா (7) மற்றும் அஜித் பவாரின் என்சிபி (1) ஆகியவற்றை விட பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. அவை பிரிந்து சென்ற கட்சிகள், ஒரு வகையில் புதிய கட்சிகள். சிவசேனா தனது வாக்குகளை எங்களுக்கு மாற்றுவது எளிதாக இருந்தது, ஏனென்றால் இரு கட்சிகளும் பல ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எப்போதும் என்சிபிக்கு எதிராகப் போட்டியிட்டோம். அதனால், அந்த வாக்குகளை எங்களுக்கு மாற்றுவது அவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் இப்போது, அந்த சிக்கல் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல பாஜகவின் முக்கிய வாக்காளர்கள் என்சிபி உடனான கூட்டணியை விரும்பவில்லை. ஆனால் நாங்கள் இந்த கூட்டணியின் அவசியத்தை எங்கள் தொண்டர்களிடம் வலியுறுத்தினோம். எங்கள் வாக்காளர்களில் குறைந்தது 80 சதவீதம் பேர் இப்போது என்சிபியுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் அவசியத்தை உறுதியாக உணர்ந்துள்ளார்கள் என்று உத்தரவாதம் அளிக்க முடியும்" என்று அவர் கூறினார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 80 சதவிகிதம் தொகுதி பங்கீடு குறித்த விவாதம் முடிந்துவிட்டதாக பட்னாவிஸ் கூறினார். மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE