வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும்: சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றார் கங்கனா ரனாவத்

By KU BUREAU

புதுடெல்லி: விவசாயிகளின் நலனுக்காக திரும்பப்பெறப்பட்ட வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறிய கருத்தை அவர் திரும்பப்பெற்றார்.

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவிக்கும் கருத்துகள் எல்லாம் சர்ச்சையாகி கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ‘‘இமாச்சலப் பிரதேசத்தின் கஜானா காலியாகி விட்டது. இமாச்சல் அரசு கடன் பெற்று சோனியா காந்தியிடம் கொடுக்கிறது’’ என அவர் சமீபத் தில் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. அவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் கூறியது. இந்நிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: விவசாயிகள் சந்தித்துள்ள நஷ்டத்துக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். இது சர்ச்சையாகலாம். ஆனாலும் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பின்னடைவை சந்திக்கமாட்டார்கள். நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகள் தூண்களாக உள்ளனர்.

ஆகையால், சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த 3 வேளாண்சட்டங்களை திரும்பக் கொண்டுவர விவசாயிகள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விவசாயிகளின் நலன் கருதி இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘‘பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் எவ்வளவு முயற்சித்தாலும், இந்த கருப்பு சட்டங்கள் ஒருபோதும் திரும்ப கொண்டுவர விடமாட்டோம்’’ என கூறியுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா நடே கூறுகையில், ‘‘வேளாண் சட்டத்தை எதிர்த்து 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அதன் பின்புதான் மோடி அரசு கருப்பு சட்டங்களை வாபஸ் பெற்றது. தற்போது பாஜக எம்.பி.க்கள் அதை மீண்டும் கொண்டுவர திட்டமிடுகின்றனர். ஆனால் காங்கிரஸ் விவசாயிகளுடன் துணை நிற்கும்’’ என்றார்.

ஆம் ஆத்மி: ஆம் ஆத்மி கட்சி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ‘‘ஆத்திரமூட்டும் கருத்துகளை தெரிவித்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த தனது எம்.பி.க்களை பாஜக கட்சி வேண்டுமென்றே பயன்படுத்துகிறது’’ என கூறியுள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்கு பாஜக உட்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது கருத்தை திரும்ப பெறுவதாக கங்கனா ரனாவத் நேற்று அறிவித்தார். அவர் விடுத்த செய்தியில், ‘‘நான் சினிமா நடிகை மட்டும் அல்ல பாஜக தொண்டர் என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எனது கட்சியின் கருத்துதான் எனது கருத்தாக இருக்க வேண்டும். எனது கருத்து கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது. எனது கருத்து யாரையாவது பாதித்திருந்தால், நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தெரிவித்த கருத்தை திரும்ப பெறுகிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE