சிக்கலில் சித்தராமையா முதல் இயக்குநர் மோகன் ஜி கைது வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

முடா ஊழல்: சித்தராமையாவின் மனு தள்ளுபடி: க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றும், முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. அதில் முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஆளுநர், ஜூலை 26-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா, அமைச்சரவையைக் கூட்டி நோட்டீஸை திரும்ப பெற வலியுறுத்தினார். ஆளுநர் தனது நோட்டீஸை திரும்ப பெறாததால் சித்தராமையா, தான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என ஆளுநருக்கு பதிலளித்தார்.

இந்த பதில் திருப்தி அளிக்காததால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இந்த முடா ஊழல் விவகாரம் தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கை, அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஆளுநரின் அனுமதியை உறுதி செய்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில், “தன் அதிகாரத்தை பயன்படுத்தி சுதந்திரமாக விசாரணைக்கு அனுமதி வழங்கிய ஆளுநரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்த்து மனு தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல. முதல்வர் சித்தராமையாவின் குடும்ப உறுப்பினர்களே. சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவு எந்த விதத்திலும் உள்நோக்கம் கொண்டதல்ல" என்று தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா ஆவேசம்: முடா ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும். இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் என் பின்னால் உள்ளனர். அவர்களுடைய ஆசீர்வாதமே எனக்குப் பாதுகாப்பு. நான் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சித்தராமையா உடனே பதவி விலக வேண்டும்: பாஜக - “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் தொடர்ச்சியாக, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் சுதந்திரமான முறையில் விசாரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு வழி வகுக்கும் வகையில் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்” என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

‘அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’- அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது பற்றி கேள்விக்கு பதில் அளித்த அவர், “வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கெனவே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதுவே, வெள்ளை அறிக்கைதான். வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் ஏமாற்றும் திட்டங்கள் அல்ல. அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது எனக்குத் தெரியாதா?!” என்றார். அதேபோல், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்: இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு: கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றார். 1994-ல் இலங்கையின் பிரதமராக பதவியேற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க-வுக்குப் பிறகு அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக ஹரிணி பதவியேற்றுள்ளார். இவர் அந்நாட்டின் 3-வது பெண் பிரதமராவார்.

‘நோ பார்க்கிங்’ போர்டு - போலீஸ் எச்சரிக்கை: வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்கக் கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 558 பேர் பலி: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 558 பேர் உயிரிழந்தனர். 1,835 பேர் காயமடைந்துள்ளனர். இதனை லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் உறுதி செய்துள்ளார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு இரவாக 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கைது - திரைப்பட இயக்குநரும், பாமக பிரமுகருமான மோகன் ஜி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவதாகவும், ஆனால் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை என்றும் தனது பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திருச்சி, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை ராயபுரத்தில் தங்கி இருந்த இயக்குநர் மோகன்ஜியை திருச்சி எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்று திருச்சி 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி பாலாஜி (பொறுப்பு), “குற்றமும், அதற்காக பதியப்பட்ட வழக்கும் சரியானது. இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், போலீஸார் முறையான கைது நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே அவரை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக” உத்தரவிட்டார்.

போலீஸார் இன்று மாலை 3 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று நேற்று (செப்.23) மோகன் ஜி-க்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில், போலீஸார் கொடுத்தக் கெடுவுக்கு முன்னதாகவே மோகன் ஜியை கைது செய்து அழைத்து வந்திருந்தனர். இதுவே அவர் சொந்த ஜாமீனில் நீதிமன்றம் விடுவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இதனிடையே, “இயக்குநர் மோகன் ஜி கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஊதியம் கேட்டு காமராஜர் பல்கலை. நூதன போராட்டம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியால் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து 18-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் பேராசியர்கள் மற்றும் அலுவலர்கள் இன்று கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE