இன்று முதல் பெண்களுக்கு இலவசம்... நடைமுறைக்கு வந்தது ‘மகாலட்சுமி’ திட்டம்!

By காமதேனு

தெலங்கானா மாநிலத்தில் இன்று முதல் ஆர்டிசி அரசு பேருந்துகளில் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் இலவச பயணம் திட்டமான மகாலட்சுமி திட்டம் நடைமுறைக்கு வந்தது. இன்று காலை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்லும் பெண்களுமாக உற்சாகமாக தங்களது இலவச பயணத்தை ஆர்டிசி அரசு பேருந்துகளில் துவங்கினார்கள்.

தெலங்கானா முதல்வராக பதவியேற்றதும், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த 6 வாக்குறுதிகளை உடனடியாக ளை நிறைவேற்றுவதற்கான சட்டப்பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் கோப்பில் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.

தெலங்கானா மாநில சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி, ஆர்டிசி பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பெண்களுக்கு மாதாந்தர நிதி உதவி, ரயத்து பரோசா திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம், ரூ.500 கியாஸ் சிலிண்டர், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ஆகிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கான சட்டப்பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் கோப்பில் நேற்று முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.

நேற்று முந்தினம் ஹைதராபாத் எல்.பி ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் மாற்றுத்திறனாளி பெண் ரஜினி வரவழைக்கப்பட்டு, அவருக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.

தெலங்கானா முதல்வர், தேர்தல் பிரசாரத்தின் போது, உறுதியளித்தபடி வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திட்ட செயலுக்கு அம்மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் தங்கள் வசிப்பிட அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று காலை முதலே நடைமுறைக்கு வந்த நிலையில், தெலங்கானா மாநில பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE