வெறுப்பு, வன்முறையை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ்: காஷ்மீர் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

By KU BUREAU

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேர வைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பூஞ்ச் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் சாதி, மதம், மாநிலம் மற்றும் மொழி ரீதியாக மக்களிடையே பிரிவினையை உருவாக்குகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் வெறுப்பையும் வன்முறையையும் பரப்பி வருகிறார்கள். பஹாரி மற்றும் குஜ்ஜார் சமூகத்தினர் இடையே பிளவை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களுடைய இந்த திட்டம் தோல்வி அடையும்.

வெறுப்பை அன்பால் மட்டுமே வெல்ல முடியும். ஒருபுறம் வெறுப்பை பரப்புபவர்கள் இருக்கிறார்கள். மறுபுறம் அன்பைஊக்குவிப்பவர்கள் இருக்கிறார்கள். இண்டியா கூட்டணி கட்சியினர் வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் உரிமையை நிலைநாட்ட காங்கிரஸ் கட்சி பாடுபடும். எங்களைப் பொறுத்தவரை அனைவரும் சமம். யாரையும் பின்தங்க விடமாட்டோம்.

மக்கள் விரும்புவதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்களுடைய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப தயா ராக இருக்கிறோம். எனவே உங்கள் பிரச்சினைகளை எங்களிடம் கூறுங்கள். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளது. அரசின் மக்கள் விரோதகொள்கைகள், சட்டங்களுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். வரும் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE