கேரளாவில் நுழைந்தது குரங்கு அம்மை: உலகை அச்சுறுத்தும் கிளேட் 1பி வகையால் ஒருவர் பாதிப்பு

By KU BUREAU

கேரளா: உலகளாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கிளேட் 1 பி வகை குரங்கு அம்மை பாதிப்பு முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா வந்த 38 வயது நபருக்கு இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருக்கு கிளேட் 1பி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நோயாளி தற்போது நல்ல நிலையில் உள்ளார் மற்றும் கண்காணிப்பில் உள்ளார் என கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின்படி, "இந்தியாவில் குரங்கு அம்மையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். முக்கியமாக உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் கிளேட் 1பி வகையில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு இதுவாகும். எனவே இது மிகவும் தீவிரமானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க மாநிலங்கள் முழுமையாக தயாராக உள்ளன. இருப்பினும், மக்கள் பீதியடையத் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் தொடர்புகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பில் உள்ளன. இதுவரை, எந்த தொடர்புக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி இந்த மாத தொடக்கத்தில் டெல்லியின் லோக் நாயக் மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

ஆகஸ்ட் 14 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE