‘4வது முறையாக பாஜக ஆட்சியமைக்குமா என தெரியாது...’ - நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

By KU BUREAU

நாக்பூர்: எங்கள் அரசாங்கம் நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ராம்தாஸ் அதவாலே நிச்சயம் அடுத்த முறையும் அமைச்சராவார் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிண்டல் செய்துள்ளார்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாக்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, அரசாங்கங்கள் மாறினாலும் தனது அமைச்சரவை பதவியை தக்கவைத்துக்கொள்ளும் திறன் அவருக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவை கிண்டல் செய்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "எங்கள் அரசாங்கம் நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் ராம்தாஸ் அதவாலே அமைச்சராக வருவார் என்பது உறுதி" என்றார். அத்வாலே மேடையில் இருந்தபோதே இதுபோல பேசிய அவர், இது வெறும் நகைச்சுவை என்று பிறகு தெளிவுபடுத்தினார்.

இந்திய குடியரசுக் கட்சியின் (ஆர்பிஐ) ராம்தாஸ் அதவாலே மூன்று முறை மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். மேலும் நான்காவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சராகத் தொடர்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதவாலே பேசும்போது, “வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி குறைந்தது 10 முதல் 12 இடங்களில் போட்டியிட வேண்டும். மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியின் ஒரு அங்கமான ஆர்பிஐ, வடக்கு நாக்பூர், உம்ரெட் (நாக்பூர்), யவத்மாலில் உமர்கெட் மற்றும் வாஷிம் உட்பட விதர்பாவில் மூன்று முதல் நான்கு இடங்களைக் கேட்கும்” என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி, ஆர்பிஐ ஆகிய கட்சிகள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE