டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் உள்பட நான்கு பதவிகளிலும் ஐக்கிய இடது கூட்டணி வெற்றி பெற்றன.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் மாணவர் சங்கத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்தலில் அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டிஎஸ்எப்), இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எப்) ஆகியவற்றைக் கொண்ட ஐக்கிய இடது கூட்டணி ஓர் அணியாகவும், ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஓர் அணியாகவும் போட்டி போட்டன. இத்தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச வாக்கு சதவீதம் ஆகும்.
இந்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மாணவர் சங்க தலைவர் தேர்தலில் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் உமேஷ் அஜ்மீரா 1,676 வாக்குகள் பெற்றார்.
கடந்த 1996-97ல் இடதுசாரிகள் சார்பில் பட்டி லால் பைரவா மாணவர் சங்கத் தேர்தலில் தலித் தலைவராக வென்றிருந்தார். அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து பீகாரின் கயாவைச் சேர்ந்த தனஞ்செய் இடதுசாரி கட்சியிலிருந்து மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவர் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர் தீபிகா சர்மாவை 927 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு வேட்பாளர் அவிஜித் கோஷ் வெற்றி பெற்றார். கோஷ் 2,409 வாக்குகளையும், சர்மா 1,482 வாக்குகளையும் பெற்றனர்.
இதேபோல் பொதுச்செயலாளர் தேர்தலில் பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்க (பிஏபிஎஸ்ஏ) வேட்பாளர் பிரியன்ஷி ஆர்யா, ஏபிவிபி வேட்பாளர் அர்ஜுன் ஆனந்தை 926 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆர்யா 2,887 வாக்குகளையும், ஆனந்த் 1961 வாக்குகளையும் பெற்றனர். பிஏபிஎஸ்ஏ வேட்பாளருக்கு ஐக்கிய இடது கூட்டணி ஆதரவு தெரிவித்திருந்தது.
இணைச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இடதுசாரி கட்சியின் முகமது சஜித் 508 வாக்குகள் வித்தியாசத்தில் ஏபிவிபி வேட்பாளர் கோவிந்த் டாங்கியை தோற்கடித்தார். சஜித் 2,574 வாக்குகளையும் கோவிந்த் 2,066 வாக்குகளையும் பெற்றனர்.
ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரிக் குழு அமோக வெற்றிபெற்றதால், ஜேஎன்யு இடதுசாரி கோட்டையாக உருவெடுத்துள்ளது. ஏபிவிபி, நான்கு பதவிகளில் முதலில் முன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்த வாக்குகள் எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து தோல்வியுற்றது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!