மண்டியில் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத்தை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கங்கனா ரனாவத் நமது வேட்பாளர் மட்டுமல்ல. நமது நாட்டின் மகள்கள், இளைஞர்களின் விருப்பங்களை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். முற்றிலும் புதிய துறையில் மகள்களும் சுயமாக வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார்.
இருப்பினும், காங்கிரஸ் இன்னும் பழமைவாத மனநிலையில்தான் உள்ளது. கங்கனாவுக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்திய வார்த்தைகள் மண்டியை மற்றும் இந்த மாநிலத்தை அவமதிப்பவை ஆகும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை நீங்கள் அறிவீர்கள். அப்போது பலவீனமான அரசு இருந்தது. இந்த பலவீனத்தை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் அரசு உதவி கேட்டு உலகம் முழுவதும் சென்றது. ஆனால் இந்தியா இனி எந்த நாட்டிடமும் உதவி கேட்கத் தேவையில்லை.
இந்தியா தனது போரை தானே நடத்தும். அவர்கள் நிலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தும். ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்காமல் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏமாற்றி வந்தது. ஆனால் அதனை பாஜக அரசு வழங்கியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.