சுழற்றி அடிக்கும் சுங்கக் கட்டண உயர்வு!

By இரா.மோகன்

தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்க சாவடிகளில் மட்டுமே சுமார் 132 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை கொடுத்திருக்கும் ஷாக் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அடுத்த இடியை வாகன ஓட்டிகளின் தலையில் இறக்கியிருக்கிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுங்கக் கட்டண உயர்வால் விலைவாசி இன்னும் எகிறி பொதுமக்கள் மீதும் மறைமுக தாக்குதல் நடத்தப் போகிறது.

நாடு முழுவதும் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுடைய தேசிய நெடுஞ்சாலைகளில் 892 சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை முகமையானது ( NHAI ) இந்தச் சுங்கசாவடிகளை தனியார் வசம் ஒப்படைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் உரிமையை அளித்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 6,606 கி.மீ தூர தேசிய நெடுங்சாலைகளில் மட்டும் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றின் மூலமாக கடந்த ஆண்டில் 2,400 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலாகி இருக்கிறது. சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீத கட்டண உயர்வும் அமலுக்கு வருகிறது. அப்படி கட்டண உயர்வு வரும்போதெல்லாம் வாகன ஓட்டிகள் கண்டனக் குரல் எழுப்புவதும் காலப் போக்கில் கட்டண உயர்வை சகித்துக்கொள்வதும் வழக்கமாகி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 24 சுங்கசாவடிகளுக்கும், செப்டம்பரில் 28 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரலில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்யப்பட்டது. தற்போது மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 28 சுங்கசாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு செப்டம்பர் முதல் தேதி அமலுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே அதிகப்படியான சுங்கசாவடிகள் உள்ள மாநிலம் தமிழகம் தான். ஏன் இந்த பாரபட்சம் என தமிழக எம்பி-க்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியபோது, “60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என மக்களவையில் உறுதியளித்தார் சாலை போக்குவரத்துக் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

ஆனால், அவரின் அந்த உத்தரவாதம் இன்னும் பேச்சளவிலேயே இருக்கிறது. இதில் கொடுமை என்னவெனில், 1956-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதியை மீறி கடந்த 2017-21 காலகட்டத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆகமொத்தத்தில் சுங்கச்சாவடிகள் தவணை முறையில் வாகன ஓட்டிகளின் பாக்கெட்டை பதம் பார்க்கும் கொள்ளைச் சாவடிகளாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜிடம் பேசினோம்.

‘’தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட லாரிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக இருந்தாலும், தொழில் நடத்த முடியாத சூழலில் உடைப்புக்கு போன லாரிகளின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சமாகும். இதே போல் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி லாரி தொழில் மேற்கொண்டவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலையில் கடனை திரும்ப செலுத்த இயலவில்லை. அந்த வகையில் நிதி நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சம் லாரிகளை பறிமுதல் செய்துள்ளன.

எஞ்சியுள்ள சுமார் மூன்றரை லட்சம் லாரிகளே இயங்கி வருகின்றன. இந்த லாரிகளுக்கும் முழுமையாக லோடு கிடைப்பதில்லை. விவசாய உற்பத்தி பாதிப்பு, தொழில் நிறுவனங்கள் முடக்கம், வடமாநிலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றம் போன்றவற்றால் லாரி தொழில் முழுமையாக முடங்கி கிடக்கிறது. சராசரியாக ஒரு லோடுக்கு 6 லாரிகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

தனராஜ்

இத்தகைய சூழலில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி வரும் மத்திய அரசின் செயல் எங்களின் தொழிலை இன்னும் நசுக்குகிறது. ஏற்கெனவே லாரி உதிரி பாகங்கள் விலை, டயர் விலை, டீசல் விலை போன்றவற்றால் லாரி தொழில் நசிந்து கிடக்கிறது. போதாதுக்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1,700 கி.மீ நீள சாலைக்கும் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது.

1992-ம் ஆண்டு துவங்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கான மதிப்பீட்டு தொகையெல்லாம் எப்போது வசூலாகி இருக்கும். இதனால் காலாவதியான டோல்களை எல்லாம் மூடாமல் இன்னும் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சுமை லாரி உரிமையாளர்களை நேரடியாகவும் மறைமுகமாக மக்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

அகில இந்திய மோட்டார் சம்மேளனத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாக ஆண்டுக்கு ஆண்டு டோல் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினோம். சாலை வரியைப் போன்று ஒரே ஒரு முறை செலுத்தக்கூடிய சுங்கக் கட்டண முறையை அமல்படுத்த கோரிக்கை வைத்தோம். ஆனால், மத்திய அரசு எதையும் ஏற்கவில்லை.

இப்போது புதிதாக ஜிபிஎஸ் கருவி மூலம் டோல் வசூலிக்கப்பட இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது அமலுக்கு வந்தால் நெடுஞ்சாலையைக் கடக்கும் வாகனங்கள் மட்டுமல்ல, நெடுஞ்சாலையைத் தொடக்கூடிய வாகனங்கள்கூட கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.

ராஜீவ்காந்தி

சுங்கச்சாவடிகளில் நடந்த வசூலில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதையெல்லாம் சரிப்படுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு சுங்ககட்டணத்தை மட்டும் ஏற்றிக்கொண்டே போகிறது மத்திய அரசு. இது, ஏற்கெனவே நலிவடைந்து கிடக்கும் பல தொழில்களை மேலும் பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, மத்திய அரசு காலவதியான சுங்கச் சாவடிகளை மூடுவதுடன், முறையற்ற கட்டண உயர்வையும் கைவிட வேண்டும்’’ என்றார் அவர்.

ராமநாதபுரம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜீவ்காந்தி இதுபற்றி கூறுகையில், “வாகனங்களின் மீது சுமத்தப்படும் கட்டண உயர்வு என்பது மறைமுகமாக மக்களின் தலையிலேயே இறங்கும். ஏற்கெனவே வாகன இன்சூரன்ஸ் உயர்வு, டயர் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை ஏற்றம் என பல இன்னல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் தொழில் வளம் இல்லாத பகுதிகளில் இழுபறி நிலையில்தால் வாகன போக்குவரத்து தொழில் என்பது நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் பாதி நாட்கள்கூட லாரிகளுக்கு லோடு கிடைப்பதில்லை. மற்ற சிறு வாகனங்களுக்கும் இதே நிலைமைதான்.

இப்படி வாகன போக்குவரத்து தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது அதனை மேலும் சிக்கலாக்கும் வகையில் சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. இது தொடர்ந்தால் வாகன போக்குவரத்து தொழிலை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்கள் வருவாய் இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்’’ என்றார்.

ஆண்டுக்கு ஆண்டு சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதில் குறியாக இருக்கும் மத்திய அரசு, சுங்கச் சாலைகள் பழுதின்றி தரமாக உள்ளதா என்பது பற்றி சிறிதளவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதனால் தான் பல இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளைவிட மோசமான நிலையில் சுங்கம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. சுங்கக் கட்டண உயர்வுக்கு தீர்வு சொல்லும் அதேசமயம், சாலைகளை பராமரிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE