டெல்லியின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஆதிஷி மர்லேனா சிங்

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் நாளை பதவியேற்கிறார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். அவர் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

இந்த சூழலில் கடந்த 17-ம் தேதி முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அன்றைய தினம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை துணைநிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் நாளை பதவியேற்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்டது. ஆதிஷி உடன் 5 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹூசைன் ஆகிய 4 பழைய அமைச்சர்களும் முகேஷ் என்ற புதியவரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE