காங்கிரஸ் கட்சிக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கம்: மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம்

By KU BUREAU

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய பிரிவுகளுக்கு காங்கிரஸும் தேசிய மாநாடு கட்சியும் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அளித்த பேட்டியில், "ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி தேர்தல் விஷயமாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அரசும், தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணியும் ஒத்த சிந்தனையை கொண்டுள்ளன" என்றார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று 'எக்ஸ்' தளத்தில் கூறியிருப்பதாவது: 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளுக்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சியின் ஆதரவு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியது காங்கிரஸை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கமும் செயல்திட்டமும் உள்ளது என்பதை அவரது கருத்து நிரூபித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ராகுல் காந்தி இந்திய விரோத சக்திகளின் பக்கம் நின்று, நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துல்லிய தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பது அல்லது இந்திய ராணுவம் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறுவது என காங்கிரஸ் கட்சியின் குரலும் பாகிஸ்தானின் குரலும் எப்போதும் ஒரேவிதமாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் கைகோத்து நிற்கிறது. ஆனால் மத்தியில் மோடி அரசு இருப்பதை காங்கிரஸும் பாகிஸ்தானும் மறந்துவிட்டன. எனவே காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவோ அல்லது தீவிரவாதமோ மீண்டும் வரப்போவதில்லை. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE