பெண்களுக்கு ரூ.2,100, மாணவிகளுக்கு ஸ்கூட்டர், ரூ 500க்கு சிலிண்டர்: ஹரியாணாவில் பாஜக வாக்குறுதி

By KU BUREAU

ரோஹ்தாக்: ஹரியாணா சட்டமன்றத் தேர்தலுக்காக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக. மாநிலத்தில் இரண்டு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும், பெண்களுக்கு ரூ.2100 நிதியுதவி, முன்னாள் அக்னிவீரர்களுக்கு நிரந்தர வேலை, 24 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளது பாஜக.

ஹரியாணா சட்டமன்றத் தேர்தலுக்காக மாநில நலன், வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 20 வாக்குறுதிகளை அளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 நிதியுதவி, 50,000 உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 10 தொழில் நகரங்கள் உருவாக்குதல், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சம் உள்ளூர் மக்களுக்கு அரசு வேலை உத்தரவாதம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சம் வரை இலவச சிகிச்சை, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு ரூ. 5 லட்சம் கூடுதல் கவரேஜ். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச நோயறிதல் சிகிச்சை. குடும்பத்தலைவிகளுக்கு 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்குதல். கிராமப்புறங்களில் உள்ள பெண் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்களை வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பாஜக வழங்கியுள்ளது.

ரோஹ்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தலைவருமான ஜேபி நட்டா, மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE