நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

By காமதேனு

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஏர் கண்டிஷனர் தண்ணீரை மீண்டும் பயன்படுத்தும் ஒரு புதுமையான வழிமுறையை விளக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராஅவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது, ஏர் கண்டிஷனர் (ஏசி) இயந்திரத்திலிருந்து வெளியேறும் தண்ணீரை சேமித்து வீட்டு தேவை, தோட்டபராமரிப்பு போன்றவற்றுக்கும் உதவும் வகையில் வழிமுறையை கொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு பெண் தனது ஏர் கண்டிஷனிங் (ஏசி) யூனிட் மூலம் உற்பத்தி செய்யப்படும் தண்ணீரைப் பாதுகாப்பதற்கும், மீண்டும் பயன்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான முறையை விளக்குகிறார். அவர் ஏசி இயந்திரத்தில் இருந்து நீர் வெளியேறும் டியூபை, ஒரு குழாயில் இணைத்து கீழே ஒரு பைப்பை அமைத்திருக்கிறார்.

அதில் சேகரமாகும் தண்ணீரை தூய்மைப் பணி, கார் கழுவுதல், தோட்ட பயன்பாடு மற்றும் பிற வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறார்.

தண்ணீரை சேமிப்பீர்!

மேலும், நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தையும், இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறும் அந்த வீடியோவில் வலியுறுத்தப்படுகிறது.

ஆனந்த் மஹிந்திரா அந்த வீடியோவுடன், "இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏசி-களைப் பயன்படுத்துகின்றனரோ அங்கெல்லாம் இது நிலையான சாதனமாக மாற வேண்டும். நீர் செல்வம் பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும். இதை பரப்புங்கள்.” என்ற வாசகங்களையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த 16ம் தேதி அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ மக்களிடையே அதிகளவில் கவனம் பெற்று 9 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. சமூக ஊடக பயனர்கள் ஏராளமானோர் குடிநீர் சேமிக்கும் இந்த வழிமுறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நுட்பத்தை பெரிய அளவில் செயல்படுத்துவது பற்றிய விவாதங்களையும் இடுகை தூண்டியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE