புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சிமருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 9-ம்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த மருத்துவமனையில் பல்வேறு முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அம்மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரை சிபிஐ கைது செய்தது. எனினும், காவல் ஆணையர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மாநில அரசு விடுத்த அழைப்பை ஏற்று பயிற்சி மருத்துவர்கள் 30 பேர் முதல்வர் மம்தாவை சந்தித்துப் பேசினர்.
சுமார் 2 மணி நேரம் நடந்தபேச்சுவார்த்தைக்கு பின்னர் மம்தா பானர்ஜி செய்சியாளர்களிடம் கூறும்போது, “பயிற்சி மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. அவர்களுடைய 99% கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம். கொல்கத்தா காவல் ஆணையரை மாற்ற முடிவு செய்துள்ளோம். இப்போதுள்ள ஆணையர் பதவி விலக ஒப்புக் கொண்டார். சுகாதாரத் துறையில் 2 அதிகாரிகள் நீக்கப்படுவார்கள்.
மேலும் நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து விரைவில் அவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார். இந்நிலையில், கொல்கத்தா ஆனையர் வினீத் கோயல் நேற்று பதவி விலகினார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் வர்மா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். இதுபோல சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் 2 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
» ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
» பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், தலைவர்கள் வாழ்த்து
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தவழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் ஒரு அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. இது கவலை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அறிக்கையை இப்போது வெளியிட்டால் அது அடுத்த கட்ட விசாரணையை பாதிக்கும் என்று தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பதவி விலக வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “முதல்வரை பதவி விலகுமாறு கூறுவது எங்கள் வேலை அல்ல” என்றனர்.
மேலும் பெண் மருத்துவர்களுக்கு இரவுப் பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மேற்குவங்க அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே, இரவுப் பணியை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும்” என்றனர். அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், “விக்கிபீடியாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இதை நீக்க உத்தரவிட வேண்டும்” என்றார். இதையடுத்து, அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என விக்கிபீடியா நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுவது குறித்த நிலவர அறிக்கையை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டனர். இதுதவிர, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மேற்கு வங்கஅரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது