டெல்லியின் அடுத்த முதல்வர் இவரா? - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்து யார்?

By KU BUREAU

டெல்லி: முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்ததாக டெல்லியின் முதல்வராகவுள்ள ஆம் ஆத்மியின் முகம் யார் என்று பார்ப்போம்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று, “அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவே அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்கிய பிறகே முதல்வர் இருக்கையில் அமர்வேன்” என்று அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அதேபோல முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் முதல்வராக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பொறுப்பேற்கும் முதலமைச்சர் சில மாதங்கள் மட்டுமே பதவியில் இருப்பார். இந்த சூழலில் ஆம் ஆத்மி சார்பில் அடுத்து முதல்வராக வாய்ப்புள்ள தலைவர்கள் பட்டியல் இங்கே...

அதிஷி: கல்வி மற்றும் பொதுப்பணித்துறை போன்ற முக்கிய இலாகாக்களை வைத்திருக்கும் டெல்லி அமைச்சர் இவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மற்றும் ரோட்ஸ் அறிஞர். அதிஷி டெல்லியின் பள்ளிகளில் கல்வியை சீரமைக்க விரிவாக பணியாற்றியுள்ளார். 43 வயதான இவர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் ஆனார். கேஜ்ரிவால் மற்றும் சிசோடியா ஆகியோர் சிறையில் இருந்தபோது, ​​டெல்லி அரசின் முகமாக இருந்தார்.

சவுரப் பாரத்வாஜ்: இவர் கிரேட்டர் கைலாஷிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ ஆனவர். அரவிந்த் கேஜ்ரிவால் அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் விஜிலென்ஸ் போன்ற இலாகாக்களை வைத்திருக்கிறார். மதுபானக் கொள்கை வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்ட பின்னர் இவரும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த காலத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய பரத்வாஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் 49 நாள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

ராகவ் சதா: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினரான இவர் மாநிலங்களவை எம்.பி ஆவார். முன்பு பட்டய கணக்காளராக பணியாற்றிய இவர் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சியில் பயணிக்கிறார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 35 வயதான இவர் நாட்டின் மிக முக்கியமான இளம் அரசியல்வாதிகளில் ஒருவர். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மியின் முகமாக அறியப்படுகிறார்.

கைலாஷ் கெலாட்: டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். போக்குவரத்து, நிதி மற்றும் வீட்டு விவகாரங்கள் போன்ற முக்கிய இலாகாக்களை வைத்திருக்கிறார். 50 வயதான இவர் 2015 முதல் டெல்லியின் நஜாப்கர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

சஞ்சய் சிங்: 2018 முதல் இவர் மாநிலங்களவை எம்.பி., ஆக உள்ளார். நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பாக மிகச்சிறப்பாக செயல்படுபவர். 52 வயதான இவர் கட்சியின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவர். மேலும், கட்சியின் தேசிய நிர்வாக மற்றும் அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE