இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

By காமதேனு

நாய் கடியால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 23 வகையான நாய்களை வீட்டில் வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வீட்டு வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு தனி இடம் உள்ளது. மனிதர்களுடன் நெருங்கிப் பழகக்கூடிய நாய்கள், நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஆனால், வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்களால் சிரமங்களும் உள்ளன. குழந்தைகள் நாய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நாய் கடிப்பதால் ரேபிஸ் உருவாகி உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது.

பிட்புல் டெரியர் வகை நாய்

இந்த நிலையில், வீட்டில் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், “வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் கீழே குறிப்பிட்டுள்ள நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். அதாவது பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போயர்போல் கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா, அகிதா, மாஸ்டிப்ஸ், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ, பந்தோக் ஆகிய 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும்.

டோர்ன்ஜாக் வகை நாய்

மேலும் ஏற்கெனவே வளர்க்கப்படும் நாய்கள் இனப்பெருக்கம் நடைபெறாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும்.அத்துடன் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்க கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE