மயிர்க்கூச்செரியும் சாகசம்... மிசோரம் ரயில்வே பால விபத்து மீட்பு பணி...வைரல் வீடியோ!

By காமதேனு

மிசோரம் ரயில்வே பால விபத்து தலத்தில், சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினரின் சாகசம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் மாவட்டத்தில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணியின்போது, எதிர்பாராவிதமாக நேற்று காலை பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 26 தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர். இவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்களை காணவில்லை என்ற நிலையில், அவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. எனினும் அவர்கள் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இறந்த தொழிலாளர்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களின் சடலங்களை மீட்பதில் பேரிடர் மீட்பு படையினர் பெரும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பைரவி-சாய்ராங் புதிய ரயில் பாதை திட்டத்தில் குருங் என்ற ஆற்றின் குறுக்காக பிரம்மாண்ட தூண்களின் மீதான ரயில்பாதை கட்டுமானப் பணிகளின் போது விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களின் சடலங்களை மீட்க, இடிந்து விழுந்த பாலத்தின் சிதிலங்களுக்கும், பாலத்தின் ராட்சத தூண்களுக்கும் இடையே பேரிடர் மீட்பு படையினர் மயிர்க்கூச்செரியும் சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவை தொடர்பான வீடியோக்களை மிசோரம் அமைச்சர்களும் பகிர்ந்து, மீட்பு படையினருக்கு உத்வேகம் தந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE