‘இதுதான் எனது கடைசி முயற்சி’ - போராடும் மருத்துவர்களை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி!

By KU BUREAU

கொல்கத்தா: போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் நேரில் சென்று பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நான் முதல்வராக வரவில்லை, உங்களின் மூத்த சகோதரியாக வந்துள்ளேன். இந்த நெருக்கடியை தீர்க்க இதுவே எனது கடைசி முயற்சி” என்று கூறினார்

கொல்கத்தாவில் உள்ள மாநில சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்த்யா பவனுக்கு வெளியே மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு இன்று நேரில் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

போராடும் மருத்துவர்களிடையே பேசிய மம்தா பானர்ஜி, "தயவுசெய்து ஐந்து நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள், பின்னர் முழக்கங்களை எழுப்புங்கள். அவ்வாறு செய்வது உங்கள் ஜனநாயக உரிமை. நான் முதல்வராக வரவில்லை, உங்களின் மூத்த சகோதரியாக வந்துள்ளேன். எனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கு எதிராக, நான் உங்கள் போராட்டத்திற்கு வணக்கம் செலுத்த இங்கு வந்தேன். நானும் மாணவர் இயக்கங்களில் அங்கம் வகித்துள்ளேன். நீங்கள் நேற்று இரவு முழுவதும் மழையிலும் போராட்டத்தை தொடர்ந்தீர்கள், இதனால் என்னால் தூங்க முடியவில்லை.

கோரிக்கைகளை நான் ஆய்வு செய்வேன், நான் தனியாக ஆட்சி நடத்தவில்லை. தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரிடம் பேசுவேன். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திலோத்தமாவுக்கு நீதி வேண்டும். (பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர்). உங்கள் கோரிக்கைகளை நான் பரிசீலிப்பேன்” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டும். சரியான மருத்துவ சேவை கிடைக்காததால் பல நோயாளிகள் இறந்துவிட்டனர், அவர்களின் குடும்பங்களை பற்றி கவலைப்படுகிறேன். எனவே பணிக்குத் திரும்புங்கள். எந்த அநீதியும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூத்த மற்றும் இளநிலை மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்களை அமைப்பேன்.

குற்றவாளிகள் என தெரிந்தால் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள், அவர்கள் எனது நண்பர்கள் போல் இல்லை. தயவு செய்து உங்களுக்கிடையில் பேசுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். நீங்கள் நிறைய வேலை செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், நீங்கள் எங்களுக்கு முக்கியம். இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எனது கடைசி முயற்சி இதுவே. நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தால், உங்கள் புகார்களை நான் பரிசீலிப்பேன்” என்றார்

முதல்வர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று தெரிவித்தனர்.

முன்னதாக, ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வரும் ஜூனியர் மருத்துவர்கள், நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE