‘கேள்வி கேட்டால் அவமரியாதையுடன் நடத்துகிறார்கள்’ - அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!

By KU BUREAU

புதுடெல்லி: அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளர் சீனிவாசன் அதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். அவரது பேச்சு இணையதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வீடியோவை பகிர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இதனையடுத்து அன்னபூர்வா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் நேற்று வைரலானது. அதில் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் சந்தித்த அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ''நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என எழுந்து கைக்கூப்பி மன்னிப்பு கோரியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டிய அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி பாஜக மன்னிப்பு கோர வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், நமது பொது ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை பற்றி கேட்கும்போது, ​​அவரது கோரிக்கையை ஆணவத்துடன் மற்றும் முற்றிலும் அவமரியாதையுடன் எதிர்கொள்கிறார்கள்.

ஆனால், இதுவே ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, ​​மோடி ஜி அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.

பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்களுக்கு அவமானமே மிஞ்சியிருக்கிறது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, ​​​​அவர்கள் அவமானப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்று கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE