ஓநாய்களை அடுத்து அச்சுறுத்தும் குள்ளநரிகள்: உ.பியில் 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் காயம்

By KU BUREAU

உத்தரபிரதேசம்: கான்பூர் அருகே உள்ள கிராமங்களில் குள்ளநரி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதுவரை இப்பகுதியில் குள்ளநரி தாக்குதல்களில் 10 வயது சிறுவன் உட்பட 3 கிராமவாசிகள் காயமடைந்துள்ளனர். ஒரு குள்ளநரி வயல்வெளி வழியாகச் செல்வது கேமராவில் பதிவானதால் வனத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கான்பூர் பகுதியில் வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மாலை, ஷானு என்ற 10 வயது சிறுவன் மற்றும் ராம் பகதூர் ஆகியோர் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு குள்ளநரி அவர்களை தாக்கி காயப்படுத்தியது. இதேபோல பெஹாட் சகாட் பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ராம் கிஷோர் என்பவர் குள்ளநரி தாக்குதலில் காயமடைந்தார். பல இடங்களில் குள்ளநரிகளின் தாக்குதல்கள் நடந்தாலும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் கூறினார்.

அதிகப்படியான மழைப்பொழிவு காரணமாக வன விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். இதனால் அவை அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் தாக்குதலில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஓநாய்களை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை ஐந்து ஓநாய்கள் பிடிபட்டுள்ளன. இருப்பினும், ஆறாவது ஓநாய் இதுவரை சிக்காமல் மக்களுக்கு பீதியை உருவாக்கி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE