புலி தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு; 15 நாட்களில் இரண்டாவது மரணம் - உ.பியில் பதற்றம்

By KU BUREAU

லக்கிம்பூர் கெரி: உத்தரபிரதேச மாநிலம் தெற்கு கெரி வனப் பிரிவின் மகேஷ்பூர் பகுதியில் இன்று 40 வயதுடைய நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். பதினைந்து நாட்களுக்குள் அப்பகுதியில் புலியால் கொல்லப்படும் இரண்டாவது நபர் இவர் ஆவார்.

முடா அசி கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் என்பவர் தனது கரும்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உடனடியாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஆகஸ்ட் 27 அன்று, இதே புலியால் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த அம்பரீஷ் குமார் கொல்லப்பட்டார். இந்த துயர சம்பவங்களை தொடர்ந்து, மாநில வனத்துறை அமைச்சர் அருண்குமார் அப்பகுதிக்கு சென்று நிலைமையை மதிப்பீடு செய்து புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களுடன் நான்கு ரோந்துக் குழுக்கள் அமைத்து புலியை தேடி வருகின்றனர். மேலும் புலியைக் கண்டுபிடித்து, கண்காணிக்க நான்கு கூண்டுகள் மற்றும் 40 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், கனமழை மற்றும் நீர்நிலைகளில் ஏற்பட்ட அதிக நீர்வரத்து காரணமாக புலியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு புலியின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக தெற்கு கெரி கோட்ட வனத்துறை அதிகாரி சஞ்சய் பிஸ்வால் தெரிவித்தார். புலியின் சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலைமை பதற்றமாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE