ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: வினேஷ் போகத்துக்கு எதிராக பாஜக சார்பில் ஏர் இந்தியா முன்னாள் விமானி போட்டி

By KU BUREAU

புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஹரியானா தேர்தலையொட்டி, 67 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் லாட்வா தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்வர் நயாப் சிங்சைனி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக மேலிடம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எதிராக கேப்டன் யோகேஷ் பைராகியை பாஜக களமிறக்கவுள்ளது. 35 வயதாகும் யோகேஷ் பைராகி, ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றியுள்ளார். மேலும், ஹரியானா மாநில பாஜக இளைஞரணியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

சென்னை வெள்ளத்தின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டது, கரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியரை தாயகம் அழைத்து வந்த ‘வந்தே பாரத்' இயக்கத்தில் பங்கேற்றவர் யோகேஷ் பைராகி. பாஜக மேலிட அழைப்பின் பேரில் அவர் கட்சியில் சேர்ந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். தற்போது முதன்முறையாக ஹரியானா பேரவைத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டம் சாஃபிடோன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் பைராகி. தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் உள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை ஒழிப்பேன் என்று யோகேஷ் பைராகி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE