புதுடெல்லி: இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்று கிளேட் 2 வகையை சார்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நாட்டுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பிய நபருக்கு அந்நோய் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் நேற்று அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதியானது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்று கிளேட் 2 வகையை சார்ந்தது எனவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளேட்-1 வகை குரங்கம்மை தொற்றை தான் மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய குரங்கம்மை தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கவில் உள்ள நாடுகளில் பரவி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுக் கூட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.