லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ்-பிவானி காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது. கான்பூரின் முதேரி கிராமத்தின் கிராசிங் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்பிஜி எரிவாயு சிலிண்டர் மீது இந்த ரயில் மோதியது. ஆனால், உடனடியாக ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக்கைப் பயன்படுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இன்று காலை 8:20 மணியளவில் காளிந்தி எக்ஸ்பிரஸ் ஹரியானாவில் உள்ள பிவானியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சிவராஜ்பூர் வழியாக செல்லும் போது, ரயில் தண்டவாளத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடப்பதை லோகோ பைலட் கண்டார். அவர் உடனடியாக செயல்பட்டு அவசரகால பிரேக்கை பிடித்தார். ஆனாலும் ரயில் குறைந்த வேகத்தில் சிலிண்டரில் மோதியது. இதனால் சிலிண்டர் தண்டவாளத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது. இதனை தொடர்ந்து, ரயில் சிறிது நேரத்தில் நின்றுவிட்டது. எனவே பெரும் விபத்து தடுக்கப்பட்டதுடன், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து லோகோ பைலட் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு புகார் அளித்ததால், அந்த இடத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு ரயில் நின்றது. அதன்பின்னர் விசாரணைக்காக பில்ஹவுர் நிலையத்தில் மீண்டும் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே போலீஸார் மற்றும் உத்தரபிரதேச போலீஸார் நடத்திய சோதனையில், சேதமடைந்த எல்பிஜி சிலிண்டருடன் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டில், தீப்பெட்டிகள் மற்றும் ஒரு பை உட்பட சந்தேகத்திற்குரிய பொருட்களை மீட்டனர். பாட்டில் ஒரு தற்காலிக பெட்ரோல் வெடிகுண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், இது தொடர்பாக தடயவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
» ஜிபே மூலம் புதியவகை மோசடி: சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை
» மனைவி ஆர்த்தியை பிரிகிறேன்... ஜெயம் ரவி பரபரப்பு அறிவிப்பு!