செயற்கை நுண்ணறிவு பற்றி பலவிதமாக பேசத் துவங்கியிருக்கிறோம். இனி வரும் காலங்களில் செயற்கை ஊடகம் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் பேசியாக வேண்டும் என்கின்றனர். அதென்ன செயற்கை ஊடகம் என்று கேட்கலாம். செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக அமையும் ஆக்கத்திறன் நுட்பத்தால் உருவாக்கப்படும் ஆக்கங்களையே இப்படி, செயற்கை ஊடகம் என குறிப்பிடுகின்றனர். ஆங்கிலத்தில் இதை சிந்தடிக் மீடியா என்கின்றனர்.
ஏஐ மூலம் உருவாக்கப்படும், நிஜமான ஆக்கம் போலவே தோன்றக்கூடிய உண்மையில்லாத ஆக்கங்கள் பொதுவாக டீப்ஃபேக் என குறிப்பிடப்படுகின்றன. மனித முகங்கள் துவங்கி, வீடியோ காட்சிகள், ஆடியோ உரை என பலவிதமான ஆக்கங்கள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன. இவற்றின் நிஜம் போன்ற தன்மை அதிகரித்து வருவதோடு, ஆக்கங்கள் உருவாகும் வேகமும் அதிகரித்து வருவதால் இவற்றை செயற்கை ஊடகம் என அழைக்கத் துவங்கியுள்ளனர். நாம் பொய் ஊடகம் அல்லது பொய் கலைகள் என வைத்துக்கொள்ளலாம்.
ஆக்கத்திறன் ஏஐ கொண்டு உருவாக்கப்படும் செயற்கை ஊடகம் அல்லது பொய் ஊடகம், மனிதர்களுடைய படைப்புத்திறனுக்கு சவாலாக விளங்கலாம் என்பதோடு, உண்மை எது? பொய் எது? என கண்டறிய முடியாத குழப்பத்தை உண்டாக்கி பெரும் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என ஏஐ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் தேர்தல் நேரத்தில் இத்தகைய பொய் ஊடகங்களின் உருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கலாம் என்கின்றனர். ஏற்கனவே இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன. அரசியல் களத்தில் இது இன்னும் தீவிரமாகலாம்.
அடுத்த சில ஆண்டுகளில் இணையத்தில், 90 சதவீத உள்ளடக்கம் செயற்கை ஊடகமாக இருக்கலாம் என்கிறார் நினா ஷிக் (Nina Schick). இந்த கருத்தை வலியுறுத்தி அவர், ’டீப்ஃபேக்: காத்திருக்கும் தகவல் ஊழிக்காலம்’ எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். புதிய வகை ஏஐ ஆக அமையும் ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தின் நிஜ உலக பயன்பாடுகளை பார்க்கத் துவங்கியிருப்பதாகவும் நினா கூறுகிறார். ஆக்கத்திறன் ஏஐ தினசரி அடிப்படையில், தகவல்களோடு நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையே மாற்றி அமைக்க போவதாகவும் கூறுகிறார். தகவல் சூழலின் அடிப்படையே மாற இருப்பதாகவும் கூறுபவர், இதன் தத்துவ மற்றும் சமூக தாக்கம் பற்றியே அடுத்த ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு பேசிக்கொண்டிருக்கப்போகிறோம் என்றும் எச்சரிக்கிறார்.
மேலும் வரிசையாக பல கேள்விகளையும் அடுக்குகிறார். ஏஐ உலகை எப்படி மாற்றி அமைக்கும், இந்த ஆற்றல் வாய்ந்த நுட்பங்களை கட்டுப்படுத்துவது யார்?, இவற்றை தனியார் நிறுவனங்களின் வசம் விட்டு வைப்பது சரியா? போன்ற கேள்விகள் இனி முக்கியத்துவம் பெறும் என்கிறார். வீடியோ உள்ளிட்ட எதையும் இனி நம்மால் நம்ப முடியுமா? எனும் கேள்வியும் முக்கியத்துவம் பெறும் என்பவர், உள்ளடக்க உருவாக்கத்தில் வெளிப்படைத்தன்மை, அதை உறுதி செய்வதற்கான செயல்முறை போன்றவை எல்லாம் தேவைப்படலாம் என்கிறார்.
டீப்ஃபேக் அச்சம் ஒரு பக்கம் என்றால், இவற்றை மேம்போக்காக பயன்படுத்தி உருவாக்கப்படும் சீப்ஃபேக் அல்லது ஷேலோஃபேக் போன்றவையும் பெரும் பிரச்சனையாகலாம் என்கின்றனர். வழக்கமான எடிட்டிங் யுத்திகள் கொண்டு பொய்யாக உருவாக்கப்படும் ஆக்கங்களையே இவ்வாறு வகைப்படுத்துகின்றனர். இது தவிர டீப்ஃபேக்கிலேயே பல வகைகள் உருவாகியிருக்கின்றன. முகத்தை மட்டும் மாற்றுவது, உடல் அசைவுகளை மாற்றிப்பொருத்துவது, குரலை மாற்றுவது, உருவங்களை உருவாக்குவது, உதட்டசைவை பொருத்துவது என பலவிதமாக பொய் ஆக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.
இவற்றைக் கொண்டு அரசியல் தலைவர்கள் சொல்லாத கருத்துகளை பேச வைக்கும் வீடியோக்களை உலாவச் செய்யலாம், நட்சத்திரங்களின் முகத்தை மட்டும் பொருத்தி ஆபாச பொய் வீடியோக்களை உருவாக்கலாம், இன்னும் எத்தனையோ வில்லங்கங்கள் காத்திருக்கின்றன என்கின்றனர். மேலும் சாட்ஜிபிடி கொண்டு பொய் உரைகளையும் எழுதச்செய்யலாம். எல்லாமே பொய்யாகிப் போனால் என்னாவது? வங்கி மற்றும் நிதித்துறையில் மோசடிகளை அரங்கேற்றவும் இது பயன்படலாம் எனும் அச்சம் இருக்கிறது. இந்த கவலைகளுக்கு தீர்வு காணும் விவாதங்களும் பல மட்டங்களில் தொடங்கியிருக்கின்றன.
ஏஐ ஆக்கங்களுக்கு அடையாள குறியை உருவாக்குவது தீர்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவற்றை எல்லாம் விட முக்கியமாக, பொய் ஆக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஏஐ செயல்பாடு தொடர்பான அடிப்படை புரிதலை அளிக்கும் ஏஐ கல்வியறிவு அவசியம் என வலியுறுத்தப்படும் நிலையில், இணையத்தில் காணும் ஆக்கங்கள் எல்லாம் உண்மை அல்ல எனும் உணர்வோடு அவற்றை பகுத்தறியும் அடிப்படை திறனை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.
ஏஐ ஆக்கங்கள் தொடர்பான புதிய சட்டங்களும் தேவை என வலியுறுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த திசையில் ஏற்கனவே வழிகாட்டி வருகிறது. ஆனால் பொய் ஆக்கங்களுக்கு நல்லவிதமான பயன்பாடுகளும் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு மேம்பட்ட அணுகல் வசதியை அளிப்பது உள்பட பலவிதங்களில் இந்த நுட்பம் பயன்படும் சாத்தியம் இருக்கிறது. செயற்கை குரல் கொண்டு பொருட்களை விவரிப்பதன் மூலம் பார்வை குறைபாடு கொண்டவர்கள் இணைய உலகில் உலா வர வழிகாட்டலாம் என்கின்றனர். மைக்ரோசாப்டின் ’சீயுங்.ஏஐ’ மற்றும் கூகுளின் ’லுகவுட்’ ஏற்கனவே நிஜ உலகப் பொருட்கள் தொடர்பான வர்ணனை அளிக்க செயற்கை குரலை பயன்படுத்துகின்றன.
அதே போல பார்வை குறைபாடு கொண்டவர்கள் தங்களுடைய கைத்தடி மூலம் மெய்நிகர் உலகை அறிந்து கொள்ள உதவும் கேண்டோரலர் (Canetroller) நுட்பம் உதவுகிறது. நோய் தாக்கத்தால் பேசும் திறனை இழந்தவர்கள், செயற்கை குரல் மூலம் தங்கள் அன்புக்குரியவர்களோடு தொடர்ந்து பேசும் சாத்தியமும் இருக்கிறது. இதே போலவே, எழுத்து வடிவை படித்துக்காட்டும் சேவையையும் செயற்கை குரல் மூலம் அளிக்கலாம் என்கின்றனர். கல்வித்துறையில் இந்த நுட்பம் புதுமையான கற்றல் அனுபவத்தை வழங்கலாம் என்கின்றனர்.
ஏஐ உருவாக்கிய செயற்கை குரல் கொண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கும் உயிர் கொடுக்கலாம் என்கின்றனர். அமெரிக்காவில், முன்னாள் அதிபர் ஜான் கென்னடி வழங்காமல் விட்டுச்சென்ற ’பனிப்போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சை’ அவரது குரல் மூலமே உருவாக்கியிருக்கின்றனர். கென்னடி எதிர்பாராமல் படுகொலை செய்யப்பட்டதால் கைவிடப்பட்ட இந்த உரையை, அவரது செயற்கை குரல் கொண்டு பேச வைத்துள்ளனர். புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்திற்கும் இதே முறையில் உயிர் கொடுத்துள்ளனர். மோனாலிசா கண்களையும், தலையையும் அசைப்பது போல செய்துள்ளனர். மறைந்த ஹாலிவுட் நட்சத்திரம் மர்லின் மன்றோவையும் இதே போல மறு ஆக்கம் செய்துள்ளனர்.
யுனிசெப் அமைப்பு, எம்.ஐ.டி பல்கலை குழுவுடன் இணைந்து, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு பகுதிகளை டிஜிட்டல் பிரதியெடுத்து, உலகின் மற்ற முக்கிய நகரங்களில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டால் பாதிப்பு எப்படி இருக்கும் என உணர்த்தும் வகையில் டீப் எம்பதி (Deep Empathy) எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் மீது பரிவு கொள்ள இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேரியா விழிப்புணர்வுக்காக தயார் செய்யப்பட்ட வீடியோல் கால்பந்து நட்சத்திரம் டேவின் பெக்காம், ஏழு மொழிகளில் சரளமாக பேசினார். சிந்தஷியா எனும் நிறுவனம், வோகல் ஐடி (VOCALiD, )நிறுவனத்துடன் இணைந்து இந்த பல மொழி வீடியோவை தயாரித்தது. டேட்டா கிரிட் எனும் ஜப்பானிய ஏஐ நிறுவனம் பேஷன் துறைக்கான செயற்கை மாடல்களை உருவாக்கித்தரும் சேவையை வழங்குகிறது.
டீப்ஃபேக் அல்லது செயற்கை ஊடகம் நுட்பத்தை நேர்மறையாகவும் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணங்கள் இவை.
ஏஐ நுட்பத்தின் இதர தாக்கங்களை தொடர்ந்து பார்ப்போம்.
(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)