வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரஸில் இணைந்தனர்: சூடுபிடிக்கும் ஹரியாணா தேர்தல்!

By KU BUREAU

புதுடெல்லி: மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸில் இணைந்தனர். இவர்கள் இருவரும் செப்டம்பர் 4 அன்று டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.

மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

முன்னதாக, இன்று இவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியாவை பெருமைப்படுத்திய நமது திறமையான சாம்பியன்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை சந்தித்தோம். உங்கள் இருவராலும் நாங்கள் பெருமைப்படுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் பாஜக எம்.பியும், அப்போதைய இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.

பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார். ஆனால், 50 கிலோ எடைப் பிரிவில் சுமார் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

முன்னதாக, இன்று வினேஷ் போகத் இரயில்வேயில் தனது பணியை ராஜினாமா செய்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘என் வாழ்க்கையில் இந்த கட்டத்தில், நான் ரயில்வே சேவையில் இருந்து விலக முடிவு செய்தேன். எனது ராஜினாமாவை தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் சமர்ப்பித்தேன். தேசத்தின் சேவையில் ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக இந்திய ரயில்வே குடும்பத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது. ஹரியாணாவில் வாக்குப்பதிவு அக்டோபர் 5ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ம் தேதியும் நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE