‘தீவிரவாத பகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது’ - அமித் ஷா 

By KU BUREAU

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தின் சாட்சியாகியுள்ளது. அது தீவிரவாத பகுதியில் இருந்து சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள யூனியன் பிரதேசத்துக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ள அமித் ஷா, அங்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையை (சங்கல்ப் பத்ரா) வெளியிட உள்ளார்.

இதுகுறித்து அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தின் சாட்சியாக உள்ளது. கல்வி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்புகளால் அந்தப் பிராந்தியம் தீவிரவாத பகுதி என்ற இடத்தில் இருந்து சுற்றுலா பகுதி என்ற நிலைக்கு மாறியுள்ளது.

நான் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் செல்கிறேன். இன்று அங்கு நான் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளேன். நாளை பாஜகவின் காரியகர்த்தா சம்மேளனத்தில் கட்சியின் காரியகர்த்தாக்களுடன் உரையாற்றுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் எதிர்ப்பு மற்றும் கட்சியிலிருந்து விலகல் என தேர்தலுக்கு முன்பே பல சிக்கல்களைச் சந்தித்து வரும் ஜம்மு காஷ்மீர் பாஜவுக்கு அமித் ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவின் வருகையே ஒட்டி ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. இரண்டு முக்கியமான பகுதிகளில் பல அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இதில் சன்னி பகுதியில் உள்ள ஹோட்டலில் அமைந்துள்ள பாஜகவின் ஊடக மையமும் அடங்கும்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு செப். 18-ம் தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு செப். 25-ம் தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு அக்.1-ம் தேதியும் நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுகள் அக்.8-ம் தேதி எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE