‘காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றது’: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை குற்றச்சாட்டு

By KU BUREAU

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆக.9-ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் அங்குள்ள கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் புதன்கிழமை இரவு நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண்ணின் தந்தை, “போலீஸார் ஆரம்பத்திலிருந்தே, இந்த வழக்கை மூடி மறைக்க முயன்றனர். பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போது அவர்கள் உடலைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.

பிரேத பரிசோதனை நடக்கும் போது நாங்கள் காவல் நிலையத்தில்தான் காத்திருந்தோம். பின்னர், எங்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டபோது, ​மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்” என்றார். இது இந்தக் கொலை விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலை வழக்கை ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆக.10ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை திங்கள் கிழமை சிபிஐ கைது செய்யது. அவரை 8 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE