சுவற்றில் அடித்து மனைவி கொலை... நாடகமாடிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது!

By காமதேனு

மனைவியை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடியதாக ஹைதராபாத் இளைஞர் காங்கிரஸ் தலைவரான வல்லப் ரெட்டி என்பவரை, தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜூலை 14 அன்று ஹைதராபாத் தனியார் மருத்துவமனைக்கு, மாரடைப்புக்கு ஆளாகிியருப்பதாக, தனது மனைவி லஹரி வல்லப் ரெட்டி கொண்டு வந்தார். லஹரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் லஹரியின் தலையில் காயம் இருந்தது குறித்து விசாரித்தபோது, வீட்டில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டதாக வல்லப் ரெட்டி தெரிவித்தார்.

இதற்குள் காவல்நிலையம் சென்ற லஹரியின் பெற்றோர், மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் லஹரியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையானது, லஹரியின் இறப்புக்கு மாரடைப்பு காரணமில்லை என்றது.

மேலும், லஹரியின் உடல் உள்ளுறுப்புகள் கடுமையான தாக்குதல் காரணமாக சேதமடைந்திருப்பதாகவும், குறிப்பாக அடிவயிறு அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போஸ்ட்மார்டம் அறிவிக்கை தெரிவித்தது. இதன் அடிப்படையில் வல்லப் ரெட்டி மற்றும் அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரங்கசாய் ரெட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மணமாகி ஒரே வருடத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் நீடித்ததை சாட்சியங்கள் உறுதி செய்தன. இதில், ஜூலை 13 இரவு வல்லப் ரெட்டி - லஹரி இடையே எழுந்த வாக்குவாதம் காரணமாக, மனைவியை கணவன் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக மனைவி லஹரியை, வல்லப் ரெட்டி சுவற்றில் அடித்ததில் பெண்ணின் பரிதாப மரணம் நேர்ந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து வல்லப் ரெட்டி மீது கொலை மற்றும் தடயங்களை அழித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தபோலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE