டெல்லி மாணவி கொலையில் திடீர் திருப்பம்... உணவு டெலிவரி ஊழியர் கைது

By காமதேனு

டெல்லியில் உள்ள பூங்காவில் மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தால் மாணவியை அவர் தடியால் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் அரவிந்தோ கல்லூரிக்கு வெளியே பூங்கா உள்ளது. அதில் அங்குள்ள இருக்கையின் அருகே இளம்பெண்ணின் உடல் நேற்று கிடந்தது. அவரது தலையில் காயங்கள் இருந்தன. அத்துடன் அருகே ரத்தக்கறையுடன் இரும்பு தடி கிடந்துள்ளது. இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போது, தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் பெயர் நர்கிஸ் என்று தெரிய வந்தது.

கமலா நேரு கல்லூரில் தனது பட்டப் படிப்பை முடிந்திருந்த நர்கிஸ், மாளவியா நகரில் ஸ்டெனோகிராஃபர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். நர்கிஸ்சும், அவரது உறவினரான இர்பானும் காதலித்து வந்துள்ளனர். அத்துடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நர்கிஸின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இர்பானை விட்டு நர்கிஸ் பிரிந்துள்ளார். இர்பானை திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இர்பான்

இதனால் அவரிடம் பேச இர்பான் பல நாட்களாக பின் தொடர்ந்துள்ளார். நேற்று பூங்காவில் இது குறித்து பேசலாம் என அழைத்து நர்கிஸை அவர் இரும்பு தடியால் அடித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இர்பானை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.

மாணவி பூங்காவில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின்(டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில்," டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்த சம்பவங்களை டிசிடபிள்யூ கவனத்தில் கொண்டு, அதற்கான நோட்டீஸ்களை வெளியிடும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE