ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு: ஹரியாணா தேர்தலில் போட்டி?!

By KU BUREAU

புதுடெல்லி: மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். இவர்கள் ஹரியாணா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.

மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் விரைவில் காங்கிரஸில் இணைவுள்ளதாகவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனநாயக் ஜனதா கட்சியின் அமர்ஜித் தண்டாவின் ஜூலானா தொகுதிக்கு வினேஷ் போகத் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜ்ரங் புனியா எந்த தொகுதியில் களமிறங்குவார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

முன்னாள் மல்யுத்த அமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டங்களால் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர். அதேபோல, அதிக எடை காரணமாக இம்முறை நூலிழையில் ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டதனால் வினேஷ் போகத் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டார்.

கடந்த வாரம் ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள ஷம்புவில் குறைந்த பட்ச ஆதரவு விலைக்காக போராடும் விவசாயிகளை சந்தித்தார். அவர், “ நான் உங்கள் மகள். உங்களுக்கு நீதி கிடைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் போராட்டம் இன்று 200 நாட்களை நிறைவு செய்கிறது. நீங்கள் எதற்காக போராட வந்தீர்களோ, அது உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறாள். அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறேன். நாங்களும் இந்திய குடிமக்கள்,எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” என்றார்.

2014 முதல் பாஜக ஆட்சி செய்து வரும் ஹரியாணாவில், வினேஷ் மற்றும் புனியாவின் வருகை காங்கிரஸை வலுப்படுத்தும் என்று அக்கட்சி நம்புகிறது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5ல் தேர்தல் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE