‘வெறுப்பினை வளர்த்ததன் பலன்’ - பசுகாவலர்களால் பள்ளி மாணவர் கொல்லப்பட்டது பற்றி கபில் சிபல் சாடல்

By KU BUREAU

புதுடெல்லி: பசு கடத்தல்காரன் எனக் கருதி 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது வெறுப்பு கொள்கைக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தின் பலன் என்று சாடியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், இந்தச் சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி பேசுவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் ஆரியன் மிஷ்ரா என்ற 12ம் வகுப்பு மாணவன் பசுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் குழு ஒன்றால் ஆக.23ம் தேதி காரில் துரத்திச் சென்று கொல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'நமக்கு அவமானம். ஹரியாணாவில் ஆரியன் (12-ம் வகுப்பு மாணவர்) பசுக்காவலர் என்று சொல்லி கொல்பவர்களால் பசுவைக் கடத்துவதாக கருதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காரணம்: வெறுப்புக் கொள்கையை ஊக்குவித்தது. இப்போது நமது பிரதமர், நமது துணை ஜனாதிபதி, நமது உள்துறை அமைச்சர் பேசுவார்களா?" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரப் ஆகிய ஐந்து பேர் ஆக.28ம் தேதி கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர் என்று காவல் கண்காணிப்பாளர் (குற்றம்) அமன் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

குற்றவாளிகளிடம் நடந்த விசாணையின் போது, சொகுசு கார்களில் சிலர் பசுக்களைக் கடத்திச் செல்வதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து கடத்தல்காரக்களைத் தேடி அலைந்தபோது, எங்கள் கண்ணில் ஒரு டஸ்டர் கார் தெரிந்தது. உடனடியாக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆரியனின் நண்பன் ஹர்ஷித்திடம் காரை நிறுத்தும்படி கூறினோம். என்றாலும், அவர் காரை நிறுத்தவில்லை.

இதனால் நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினோம். அதில் ஆரியன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்ததாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர். பசு காவலர்கள், ஆரியன் மிஸ்ரா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஷங்கி, ஹர்ஷித் மற்றும் இரண்டு பெண்களை டெல்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE